ஆன்மிகம்
பூச்சொரிதலுக்காக பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி.

வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2019-03-16 03:39 GMT   |   Update On 2019-03-16 03:39 GMT
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதில் அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூத்தட்டுகளிலும், கூடைகளிலும் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். பகல் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு வந்த போது எடுத்த படம்.

தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவிலுக்கு பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதேபோல மாநகரின் பல்வேறு இடங்களிலும் இருந்தும், புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர்.

விடிய, விடிய அம்மனுக்கு பூக்கள் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்துடன் பூத்தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பூ ரதங்கள் அணிவகுத்து வந்த தால் உறையூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 
Tags:    

Similar News