ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது

Published On 2019-03-11 06:16 GMT   |   Update On 2019-03-11 06:16 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசி கொடைவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சமயமாநாடு, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதி உலா வருதல், வில்லிசை ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.

10-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பவனி மற்றும் ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மண்பானைகளில் வெள்ளை துணியால் மூடி, வாய்ப்பூட்டு கட்டிய பூசாரிகளால் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர், நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். அதைதொடர்ந்து குருதி கொட்டும் நிகழ்ச்சி, ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

முன்னதாக அதிகாலையில் சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், அடியந்தர பூஜை, குத்தியோட்டம், பிற்பகல் 2 மணிக்கு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
Tags:    

Similar News