ஆன்மிகம்

நரக சதுர்த்தசிக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

Published On 2018-11-03 05:12 GMT   |   Update On 2018-11-03 05:12 GMT
மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது.
ஐப்பசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான 'சதுர்த்தசி'க்கு சிறப்பு உண்டு. இதை 'நரக சதுர்த்தசி' என்பர். அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று எண்ணெயில் அலை மகளும் நீரில் கங்கையும் உறைந்திருப்பர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் ஏழ்மை அகலும். தூய்மை சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம். சாதாரண நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஏற்காத தர்ம சாஸ்திரம் இந்த சதுர்த்தசியில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை கட்டாயப்படுத்துகிறது.

நீடாடிய பிறகு எமதர்மராஜனை வழிபட வேண்டும். எமனது பதினான்கு பெயர்களையும் பதினான்கு முறை குறிப்பிட்டு கைகளால் நீரை அள்ளி அளித்தாலே போதுமானது.  

'சதுர்த்தசி' என்றால் பதினான்கு. சந்திரன் ஒவ்வொரு கலையாகத் தேய்த்து தேய்ந்து அன்று 14-வது கலையோடு மிஞ்சி இருப்பான். முன்னோர் ஆராதனைக்கு சந்திரனின் கலையை வைத்து சிரார்த்த நாளை நிர்ணயம் செய்வோம். சந்திரனும் எமனும் முன்னோர்களை வழிபடும்போது இவர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

சந்திரனின் பதினான்காவது கலையே நீராடும் வேளை. பதினான்கு வடிவில் தென்படுபவன் எமன். ஐப்பசி மாத சதுர்த்தசியில் (14-வது திதி) அதிகாலையில் எண்ணையில் அலைமகளும், நீரில் கலைமகளும் அவர்களுடன் எமதர்மராஜனும் பிரச்சன்னமாவர். இந்த மூன்று பேரும் ஒன்று சேரும் சிறப்பு வேளை அது. வாழ்க்கை செழிக்க பொருளாதாரம் தேவை, இதற்கு அலைமகளின் அருள் வேண்டும். வாழ்க்கையை சுவைக்க துய்மையான மனம் தேவை.

இதற்கு கங்கையின் அருள் வேண்டும். நரக வேதனையில் இருந்து விடுபட, ஏழைகளுக்கு தீபத்தை கொடையாக அளித்து அவர்களையும் எம வழிபாட்டில் சேர்க்க வேண்டும். புத்தாடை அணிந்து எமனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். ஒளிமயமான வாழ்க்கையைப் பெற அது உதவும். தீபத்தை ஏற்றினால் அறியாமை அகன்று விடும். நரக வேதனையில் இருந்து விடுபட தீபங்களை வரிசையாக ஏற்ற வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது. நரகாசுரன் துயரத்தில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்த நாள் அது. அன்று துன்பம் விலகியதில் மக்களிடம் மகிழ்ச்சி பொங்கியது. சாஸ்திரமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மஹாளய பட்சத்தில் உலாவ வந்த நமது முன்னோர்களின் வழியனுப்பு விழாவாகவும் செயல்படுகிறது தீபாவளி. அன்று அவர்களுக்கு வழிகாட்ட தீவட்டி ஏந்த வேண்டும். ஆலயங்களிலும், குடியிருப்புகளிலும் தீபங்கள் மிளிர வேண்டும் என்று பிரம்ம புராணம் கூறும். எனவே சாஸ்திரத்தோடு இணைந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். 
Tags:    

Similar News