ஆன்மிகம்

சகாதேவன் பக்தியே வலுவானது

Published On 2018-09-15 08:40 GMT   |   Update On 2018-09-15 08:40 GMT
பாண்டவர் 5 பேரில் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார்? இதை பிரித்து பார்த்து வரையறுத்து சொல்ல முடியாது. ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.
பாண்டவர் 5 பேரில் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார்? இதை பிரித்து பார்த்து வரையறுத்து சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.

அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாக இருந்தவன். கிருஷ்ண பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்கள் இல்லை. குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார். அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்ல கிருஷ்ணர் புறப்படுகிறார். அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா- சமாதானமா என்று கேட்கிறார்.
தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர்.

ஆனால் சகாதேவன் மட்டும் “எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது. அதைச் செய்யுங்கள்” என்கிறான்.
சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்.

சகாதேவனைத் தனிமையில் சந்தித்த கிருஷ்ண பரமாத்மா “பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்” என்று கேட்டார்.

“உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்” என்றான் சகாதேவன்.

“எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!” என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நின்றார்.

ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டினான்.

அதற்கு மகிழ்ந்த கிருஷ்ணர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிந்தார்.

Tags:    

Similar News