ஆன்மிகம்

வேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் பழனி முருகப்பெருமான்

Published On 2018-03-30 08:13 GMT   |   Update On 2018-03-30 08:13 GMT
பங்குனி உத்திரத்திருநாளில் பழனியாண்டவரை வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாவ வினைகள் ஒழிந்து நல் வினைகள் பிறக்கும்.
உலக புகழ் பெற்ற புண்ணிய தலம் பழனி ஆகும். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடு அமைந்துள்ள திருத்தலம் பழனியம்பதி ஆகும். நாடி வரும் பக்தர்களுக்கு நலம் நல்கும் திருத்தலம் பழனி. வேண்டியவருக்கு வேண்டிய வரம் தரும் வள்ளல் முருகப்பெருமான். பழனியம்பதியில் ஆண்டு முழுவதும் முருகா...! முருகா...! என்ற நாமம் ஒலித்துக் கொண்டே உள்ளது.

தேவர்களும், முனிவர்களும், மகான்களும் வந்து தீர்த்தமாடி முருகனிடம் வரம் பெற்று சென்ற திருத்தலம் பழனி. சண்முக நதி, வரட்டாறு, சரவணப்பொய்கை, இடும்பன் குளம், பிரம்ம தீர்த்தம், வள்ளி சுனை போன்ற புண்ணிய தீர்த்தங்கள் பழனியை சுற்றி அமைந்துள்ளன. இங்கு நீராடி வழிபட்டால் இடர்கள் நீங்கும். இன்பம் பெருகும். வாழ்வு வளம் பெறும்.

3-ம் படை வீடான பழனியில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பழனி திருவிழா நகரம் என்று பெயர் பெற்றுள்ளது. பழனி முருகன் பக்தர்களின் குறை தீர்க்கும் ஆற்றல் கொண்டவர்.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகப்பெருமானுக்கு, இந்திரன் தனது மகள் தெய்வானையை பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் மணம் முடித்துக் கொடுக்கிறான். இத்திருமண நாளே பங்குனி உத்திரத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களும், மக்களும் நலம் பெறவே இத்திருமணம் நடைபெற்றது.

பழனி பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன் குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் சப்பரத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா நடைபெறுகிறது. 2-ம் நாள் வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 3-ம் திருநாளில் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

4-ம் நாள் தங்க மயில் வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளியானை வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளி ரதத்திலும், 7-ம் நாள் திருத்தேரிலும், 8-ம் நாள் தங்க குதிரையிலும், 9-ம் நாள் வெள்ளி பிடாரி மயில் வாகனத்திலும், 10-ம் நாள் சப்பரத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

பங்குனி உத்திர திருவிழாவில் கிரி வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி பழனியாண்டவர் உலாவருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இக்காட்சியை காண கோடி கண்கள் வேண்டும் என்பர். இதனால்தான் பங்குனி உத்திர தேரோட்ட காட்சி பாசி படர்ந்த மலை பங்குனித்தேர் ஓடும் மலை என்ற பாடலால் சிறப்பாக கூறப்படுகிறது.

பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழனியாண்டவருக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். பெரிய மேளம் இசைக்க காவடியாட்டமும் ஆடி வருகின்றனர்.

பங்குனி உத்திரத்திருநாளில் பழனியாண்டவரை வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாவ வினைகள் ஒழிந்து நல் வினைகள் பிறக்க பழனியாண்டவன் தாழ் பணிவோமாக....!
Tags:    

Similar News