ஆன்மிகம்
கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Published On 2018-03-22 04:18 GMT   |   Update On 2018-03-22 04:18 GMT
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலையில் சித்திவிநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் கொளஞ்சியப்பர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர்.


இதையடுத்து உற்சவ மூர்த்திகள் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் வருகிற 29-ந்தேதி காலை தேரோட்டமும், 30-ந் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை உற்சவ மூர்த்திகள் விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வருவார்கள். பின்னர் மாலையில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News