ஆன்மிகம்

மனைவியை காளியாக பார்த்த பரமஹம்சர்

Published On 2018-02-18 03:38 GMT   |   Update On 2018-02-18 03:38 GMT
சீடர்களாலும் பக்தர்களாலும் பரமஹம்சர், ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டவர் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகானாக உயர்ந்தார்.
பரமஹம்சரின் மனைவி சாரதாமணி தேவிக்கு 18 வயது ஆகியிருந்தது. அப்போது அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தட்சி னேஸ்வரம் வரை கால் நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார்.

பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம் ‘உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.’ என்றார்.

சாரதாமணி தேவியும் ‘தாங்கள் என்னை மனைவியாக ஏற்க வேண்டாம். தங்களுக்குப் பணிவிடை செய்யும் சீடராக ஏற்றுக் கொண்டு தங்களுக்கு அருகில் இருக்க அனுமதியளிக்க வேண்டும்’ என்று வேண்டினார். பரமஹம்சரும் அதற்கு சம்மதித்தார். சாரதாமணி தேவி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வாழத் தொடங்கினார்.

அதன் பிறகு பரமஹம்சருடைய காலம் முழுவதும் அவரைத் தேடி வருபவர்களுக்கு உபதேசங்கள் செய்வதில்தான் கழிந்தன. அவரைத் தரிசித்து, ஞானோபதேசம் பெறுவதற்காக வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

பரமஹம்சரின் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இப்படி வேண்டிச் சீடராகச் சேர்ந்து கொண்டவர் களில் நரேந்திரன் என்பவரும் ஒருவர். இந்த நரேந்திரன் தான் பின்னாளில் ஒரு மகானாக விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவருடைய உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இந்த உபதேசங்களுக்காக அவர் நன்கொடையாக எதையும் பெற்றுக் கொள்வதில்லை.

அதன் பிறகு அவரது சீடர்கள் மற்றும் அவரைத் தேடி வரும் பக்தர்களால் ராமகிருஷ்ணர் என்று அழைக்கப் பட்டார். கதாதரராக இருந்து பின்னர் அவரது சீடர்களாலும் பக்தர்களாலும் பரமஹம்சர், ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டவர் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகானாக உயர்ந்தார்.

Tags:    

Similar News