ஆன்மிகம்
பெரிய கோவில் நந்தி பெருமானுக்கு ஒரு டன் எடையில் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரிய கோவிலில் நந்திக்கு காய் - கனிகளால் சிறப்பு அலங்காரம்

Published On 2018-01-15 08:42 GMT   |   Update On 2018-01-15 08:42 GMT
தஞ்சை பெரியகோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை நந்தி பெருமானுக்கு ஒரு டன் எடையிலான காய் - கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது.

இந்த நந்தி பெருமானுக்கு மகரசங்கராந்தி விழா நேற்று தொடங்கியது. பண்டிகையையட்டி இன்று (திங்கட்கிழமை) காலை நந்தி பெருமானுக்கு ஒரு டன் எடையிலான காய் - கனிகளால் சாகம்பரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்களாலும், ஆரஞ்சுப் பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும் முறுக்கு 
மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவில் வளாகத்தில் 108 பசுமாடுகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு பூஜை நடந்தது. மாட்டின் உரிமையாளர்களுக்கும் பட்டு துண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News