ஆன்மிகம்

இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா

Published On 2018-01-13 09:09 GMT   |   Update On 2018-01-13 09:09 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது இயற்கை, விவசாயம், தாவரங்கள் போன்றவற்றை வணங்கும் பொருட்டு கொண்டாடப்படும் பெருவிழாவாகும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது இயற்கை, விவசாயம், தாவரங்கள் போன்றவற்றை வணங்கும் பொருட்டு கொண்டாடப்படும் பெருவிழாவாகும். பொங்கல் திருவிழா என்பது தமிழகத்தில் சங்க காலம் முதற்கொண்டு பலமாற்றங்கள் பெற்று மாறுபட்டு இருந்தாலும் இன்றளவும், பெரும்தமிழர் பண்பாட்டு விழாவாக உலகெங்கும் வாழும் தமிழர்களால் சாதி, சமய பேதமின்றி அனைவராலும் ஆர்ப்பரிப்புடன் கொண்டாடப்படுகிறது. 

தமிழரின் பெருமைமிகு விழாவான பொங்கல் தை மாத பிறப்பில் கொண்டாடப்பட்டாலும் முன்பு தை மாதத்தின் பிற நாட்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் தை நீராடல், பாவை நோன்பு, இந்திர விழா என அனைத்தும் பொங்கல் பண்டிகையை தான் குறிப்பிடுகின்றன. இந்திர விழா என்பது காவிரிபூம்பட்டிணத்தில் தை மாதத்தில் 28 நாட்கள் கொண்டாடப்பட்ட பெருந்திருவிழா. இன்றைய நாளில் 4 நாட்கள் திருவிழாவாய் சுருங்கி விட்டது.

நாம் வாழ்வதற்கு உதவி புரியும் இயற்கையையும் விவசாயத்தையும் அதில் கிடைக்கும் தாவரங்களையும் வணங்கும் பொருட்டு கொண்டாப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள், அறுவடை திருநாள், உழவர் திருநாள் என பல சிறப்பு மிகு பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன. ‘பொங்கல்’ என்பது ‘நிறைவு’, அதிகரித்தல், பொலிவு என்பதை குறிக்கும். அதனாலேயே இத்திருவிழா பொங்கல் பண்டிகை என பெயர் பெற்றது.

மனித வாழ்விற்கு பேருதவி புரிவன இயற்கையே அந்த இயற்கையை தெய்வமாக பாவித்து அதனை வணங்கு வதே பொங்கல் பண்டிகையின் சிறப்பு. பொங்கல் பண்டிகை நான்கு நாட்களில் கொண்டாட்டம் என்பது போகி, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையை வணங்குவது என்பதில் போகி பண்டிகை அன்று மழை கடவுளான இந்திரனை வணங்கும் பண்டிகை. பழையவனவற்றை நீக்கி, வீடுகளை சுத்தப்படுத்தி இந்திரனை வணங்கி செய்து போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மறுநாள் பொங்கல் பண்டிகையில் இயற்கை தெய்வமாக கண்ணுக்கு காட்சி தரும் சூரிய பகவானை வணங்கும் சூரிய பொங்கல், சூரியனை வணங்குவது மட்டுமல்லாது தமது பொங்லே சூரியனின் கண்ணெதிரே நிகழும் வண்ணம் வாசல், பகுதியில் பொங்கல் வைத்து படையலிடப்படுகிறது.

விவசாயத்திற்கு உதவிய உழவு கருவிகளையும், நிலத்தை உழுத காளை மாடுகளையும் வீட்டில் வளர்த்த பசுமாடுகளையும் வணங்கும் விதமாக மாட்டு பொங்கல் அல்லது உழவர் திருநாள் கொண்டாப்படுகிறது. விவசாயம் செழிக்க உதவிய எல்லா பொருட்களும் விவசாய பணிகளை மேற்கொண்ட விவசாய தொழிலாளர்களையும் அரவணைத்து புத்தாடை, புதுநெல் வழங்கி ஆரவாராமாய் விவசாயத்திற்கான பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்கிறது.

பொங்கல் விழாவில் பிரதான இடம் பிடிப்பது புது நெற்கதிர்தான். இதனை நெய் குவியலாய் கலந்து மேட்டில் குவித்து வைத்துதான் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவர். அந்த புதுநெற்கதிரை குத்தி அரிசி எடுத்து, அந்த அரிசியில்தான் பொங்கல் செய்து இயற்கையை விவசாயத்தில் தமக்கு உணவிடும் தாவரங்களையும் வணங்குகின்றனர். 

நெற்கதிர்களுடன், கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, வள்ளிக்கிழங்கு, சேனைகிழங்கு, சிறு கிழங்கு, பனங்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவையும் பூசணி, மொச்சை, சுரைக்காய், கத்திரி போன்றவைகளும் வணங்கப்படுகின்றன. நெல்லும், கரும்பும் பிரதான தாவரமாகவும் பிற தாவரங்கள் கூடுதல் தாவரமாகவும் தொடர்ந்து பொங்கல் திருவிழாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயமும், இயற்கையும், நம் உணவு பொருளாக தாவரங்களும் வணக்கத்திற்குரியவையாக வணங்கப்பட்டு தொடர்ந்து நமது தமிழ் பண்பாட்டையும், வாழ்வாதாரத்தையும் பேணி காக்கும் விதமாகவும் பொங்கல் திருவிழா அமைந்துள்ளது.
Tags:    

Similar News