ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா தொடங்கியது

Published On 2017-12-25 06:43 GMT   |   Update On 2017-12-25 06:43 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியர் சமுதாயத்தினர் மரபுபடி மேளதாளத்துடன் ஊர்வலமாக கொடி பட்டத்தை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கொடியேற்று விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமமும், சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. 7 மணிக்கு கொடி பட்டத்தை மேளதாளம் முழங்க 4 ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. சரியாக 7.55 மணிக்கு கொடிப்பட்டத்தை தெற்கு மண்மடம் ரெகு நம்பூதிரி பெற்று கொடிமரத்தில் ஏற்றினார்.

அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகளை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா செய்தார். இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான விஜயகுமார், இணை ஆணையர் அன்புமணி, கோவில் மேலாளர் வெங்கடேஷ், கணக்கர் கண்ணன், சுவாமி பத்மேந்திரா மற்றும் தெய்வீக இயல்இசை நாடக சங்க நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து தேர்களுக்கு கால் நாட்டுவிழாவும் நடந்தது. 9.15 மணிக்கு திருமுறை பெட்டக ஊர்வலமும், 10 மணிக்கு திருவெம்பாவை பாராயணமும், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவும் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் வாகனபவனி, சப்பர ஊர்வலமும், இன்னிசை கச்சேரிகளும், பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவான ஜனவரி 1-ம் தேதி காலை 9 மணிக்குமேல் திருதேர் தொட்டிலுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுவாமி தேர், அம்மன்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்கள் உலா வருகின்றன. அம்மன்தேரை பெண்கள் மட்டும் இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், இரவு 9 மணிக்கு திரு ஆராட்டு வைபவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், தெய்வீக இயல்இசை நாடக சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News