ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 2-ந்தேதி நடக்கிறது

Published On 2017-11-25 05:09 GMT   |   Update On 2017-11-25 05:09 GMT
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம், மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயர பனை மரத்தில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து வருடத்திற்கு 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News