ஆன்மிகம்

நரசிம்மர் பற்றிய அரிய தகவல்கள்

Published On 2017-11-19 07:02 GMT   |   Update On 2017-11-19 07:02 GMT
திருமாலின் அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். நரசிம்மரை, பலரும் பல வடிவங்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஒரே ஆலயம்.. ஒன்பது நரசிம்மர் :

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம். இங்கு சிறிய மலைக்குன்றின் மேல் நவ நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலைக்குன்றின் உச்சியை அடைய 100 படிகள் ஏற வேண்டும்.

இந்த ஆலயம் மிகவும் பழமையான, புராதனமானதாகும். இத்தல மூலவர் லட்சுமி நரசிம்மன், சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். யாக தீயால் கருகிய நரசிம்மரின் திருமுகத்தை, கேட்டுப் பெற்றதால் இத்தல தாயார் மகாலட்சுமி சிங்க முகத்துடன் அருள்பாலிக்கிறார்.

அதற்கு வலதுபுறத்தில் பஞ்ச நரசிம்மர் வரிசையாக எழுந்தருளியிருக்கிறார்கள். தவிர இரண்டாவது பிரகாரத்தில் யோக நரசிம்மர் அருள்கிறார். மேலும் உற்சவரும் சிம்ம முகத்துடன் 4 கரங்களுடன் தேவி, பூதேியுடன் வீற்றிருக்கிறார்.


சோளிங்கர் யோக நரசிம்மர் :

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோளிங்கர் திருத்தலம். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மூன்று சன்னிதிகளைக் கொண்டதாக இருக்கிறது. பெரிய மலையின் மீது அமிர்தவல்லி தாயார் சமேத யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்கிறார்.

சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர், ராமர், ரங்கநாதர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். மேற்கண்ட இரண்டு மலைக்கோவில்களும் நகரில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் உள்ளன. மூன்றாவது சன்னிதி ஊருக்குள் அமைந்துள்ளது. அங்கு ஆதிகேசவப் பெருமாள், பக்தோசித பெருமாள் ஆகியோர் வீற்றிருந்து அருள்கின்றனர்.

நவ நரசிம்மர் :

திருமாலின் அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். நரசிம்மரை, பலரும் பல வடிவங்களில் வழிபாடு செய்து வருகின்றனர். அவற்றில் 9 முக்கிய வடிவங்களை, நவ நரசிம்மர் என்று அழைக்கின்றனர். அவை:- உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், கோப நரசிம்மர், குரோத நரசிம்மர், விலம்ப நரசிம்மர் என்பதாகும்.
Tags:    

Similar News