ஆன்மிகம்

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவத்தை போக்கும் காயத்ரி மந்திரம்

Published On 2017-09-27 09:16 GMT   |   Update On 2017-09-27 09:16 GMT
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

Tags:    

Similar News