ஆன்மிகம்

சடச்சியம்மன் கோவில் திருவிழா: 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து

Published On 2017-09-02 09:30 GMT   |   Update On 2017-09-02 09:30 GMT
சடச்சியம்மன் கோவில் திருவிழாவில் 80 ஆடுகள்-200 சேவல்கள் பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சடச்சியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசே‌ஷ நாட்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். மேலும் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு ஆடு, சேவல் களை வழங்குவார்கள். குறிப்பிட்ட அளவுக்கு ஆடு, சேவல்கள் சேர்ந்ததும் விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி தற்போது சடச்சியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக 80 ஆடுகள், 200 சேவல்கள் விடப்பட்டு இருந்தது. இதை கோவில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் விழா நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை கோவில் திருவிழா தொடங் கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து முடிந்தபின் நேர்த்திக்கடனாக விடப் பட்ட 80 ஆடுகள், 200 சேவல்கள் வெட்டும் பணி தொடங்கியது.

இரவு 12 மணிக்கு இந்த பணி முடிந்தவுடன் பிரியாணி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. 50-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி தயார் செய்தனர்.

இன்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரம்மாண்ட விருந்து தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வாளிகளில் பிரியாணி வழங்கப்பட்டது.
Tags:    

Similar News