ஆன்மிகம்

தடைகள் விலக்கும் கிருஷ்ணர் வழிபாடு

Published On 2017-08-14 09:29 GMT   |   Update On 2017-08-14 09:29 GMT
பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.
பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சுமார் 5230 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

மற்ற திதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில், மகா விஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.’

கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News