ஆன்மிகம்

கிருஷ்ணர் லீலை: மூதாட்டியின் மகிழ்ச்சி

Published On 2017-08-10 09:30 GMT   |   Update On 2017-08-10 09:30 GMT
வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக வந்தாள். அவள் ஒரு பழ வியாபாரி. ‘பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா?’ என்று தன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அந்த சத்தம் கேட்ட கிருஷ்ணர், தன் பிஞ்சுக் கையில் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக மாம்பழம் வாங்குவதற்காக அந்த மூதாட்டியை நோக்கி ஓடினார். யசோதா, தெருவுக்கு வியாபாரிகளிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருந்தார். அதனால்தான் தானும் தானியத்தை எடுத்துக் கொண்டு பழம் வாங்கச் சென்றார்.

தான் கொண்டு வந்த சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள்.

கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், அந்த குழந்தையின் கொஞ்சும் அழகில், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ணபரமாத்மா.

பழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாராக தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

உண்மையான அன்புக்கும், பாசத்திற்கும் இறைவன் கொடுத்த பரிசு அது.
Tags:    

Similar News