ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி

Published On 2017-08-06 02:54 GMT   |   Update On 2017-08-06 02:54 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி இன்று நடைபெறுகிறது. இந்த காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று முன்தினம் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. உலகத்தில் உள்ள அனைவரும் சிவன் வேறு விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், கயிலை மலையில் பரமசிவனிடம், சிவபெருமானே தாங்கள் நாராயணமூர்த்தியுடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று உமையம்மை வேண்டினார்.

அதற்கு இணங்கி சிவபெருமான், அம்மையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் உள்ள புன்னைவன தலமாகிய சங்கரநயினார்கோவில் என்னும் பதியில் தவம் செய்து நீ விரும்பியபடி காண்பாயாக! என்று அருளினார். அதன்படி ஆடி மாதம் கோமதி அம்பிகைக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்தருளினார். இத்தகைய அரிய காட்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆடித்தபசு காட்சி, விழாவின் 11-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு பூஜையும், 9 மணிக்கு சுவாமி- அம்பாள் மற்றும் சந்திரமவுலீசுவரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சிவபெருமான்- கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான்- கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக காட்சி கொடுக்கிறார்.

இந்த தபசு காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். நகர் பகுதியில் 4 புறங்களிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை கோவில், நகரசபை நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News