ஆன்மிகம்

முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா ருத்ராபிஷேக விழா

Published On 2017-05-24 06:16 GMT   |   Update On 2017-05-24 06:16 GMT
முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா ருத்ராபிஷேக முன்னிட்டு சந்திரமவுலீஸ்வரருக்கு நேற்று மதியத்தில் இருந்து பிரதோஷ காலம் வரை சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சந்திரமவுலீஸ்வரருக்கு நேற்று மதியத்தில் இருந்து பிரதோஷ காலம் வரை சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும் சிறப்பு அலங்காரத்தில் சந்திரமவுலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, அருகம்புல் மாலை சாத்தப்பட்டு பச்சரிசி வெல்லம் படையலிடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோவில் குருக்கள் மாணிக்க சுந்தர சிவாச்சாரியார் ருத்ராபிஷேக பூஜை, பிரதோஷ கால பூஜை ஆகியவற்றை நடத்தினார்.

மகா ருத்ராபிஷேக விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீரும், திருமண தடை நீங்கும், உத்யோக தடை நீங்கும், தொழில் பிரச்சினைகள் தீரும், ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பூஜைகளில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பூஜைகளுக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News