ஆன்மிகம்
திருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் சப்பரத்தை பெண்கள் தோளில் வைத்து தூக்கிச்சென்ற போது எடுத்த படம்.

ஈரோட்டில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்

Published On 2017-04-27 07:33 GMT   |   Update On 2017-04-27 07:33 GMT
மகிமாலீசுவரர் கோவில் திருவிழாவையொட்டி ஒரு சப்பரத்தில் 3 நாயன்மார்கள் என மொத்தம் 21 சப்பரங்களில் 63 நாயன்மார்கள் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.










ஈரோட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான மகிமாலீசுவரர் கோவில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் திருவேங்கடசாமி வீதியில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 22-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் மங்களாம்பிகை உடனமர் மகிமாலீசுவரரின் தேர் அசைந்தாடி செல்ல, தொடர்ந்து அப்பர் எழுந்தருளிய தேரும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரும் சென்றது.

நேற்று மாலையில் மங்களாம்பிகை உடனமர் மகிமாலீசுவரர் உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து சப்பரத்தில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் நாயன்மார்களின் சப்பரத்தை பெண்கள் சுமந்துகொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதில் ஒரு சப்பரத்தில் 3 நாயன்மார்கள் என மொத்தம் 21 சப்பரங்களில் 63 நாயன்மார்கள் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News