ஆன்மிகம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-04-24 05:14 GMT   |   Update On 2017-04-24 05:14 GMT
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலையில் மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு பால், இளநீர், தேன், பழவகைகளால் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள், கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்படுவார்கள். அங்கு பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத மேளதாளங்களுடன் மரத்தில் கொடியேற்றப்படும். பின்னர் அன்று இரவு அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.



இதனை தொடர்ந்து 3-ந் தேதி காலையில் சூரிய பிரபையிலும், இரவு வெள்ளி வாகனத்திலும், 4-ந் தேதி காலையில் யாளி வாகனத்திலும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 5-ந் தேதி காலையில் தங்க விமானத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும், 6-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், இரவு கருட வாகனத்திலும், 7-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

8-ந் தேதி காலையில் வெண்ணைத்தாழி உற்சவமும், இரவு மகாமேரு தெருவடைச்சான் உற்சவம், 9-ந் தேதி காலையில் பேட்டை உற்சவம், இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தப்படுவார்கள். அதிகாலை 4.15 மணி கோவில் வாசலில் இருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காலை 5.55 மணிக்குள் நிலையை வந்தடையும். 11-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

Similar News