ஆன்மிகம்

வராக மூர்த்தி இளைப்பாறிய தலம்

Published On 2017-04-20 09:38 GMT   |   Update On 2017-04-20 09:39 GMT
இரண்யாட்சனுடன் போரிட்டதால் ஏற்பட்ட களைப்பு நீங்க, வராகமூர்த்தி ஒரு இடத்தில் இளைப்பாறினார். இந்த தலத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இரண்யாட்சன் என்ற அரக்கன், பூமியை கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்தான். பூமியை மீட்பதற்காக திருமால், வராக அவதாரம் எடுத்தார். இது திருமால் எடுத்த மூன்றாவது அவதாரம் ஆகும். வராக மூர்த்தியாக அவதரித்தபோது, திருமாலின் கர்ஜனை ஈரேழு உலகங்களையும் உலுக்கும் விதத்தில் இருந்தது.

நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், புராணங்கள் செவிகளாகவும், சூரிய சந்திரர் இரு கண்களாகவும், நாகராஜன் வாலாகவும், யாகங்கள் கோரைப் பற்களாகவும், அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, கட்டை விரல் அளவிலேயே வராகராக இறைவன் வடிவெடுத்தார். சில நொடிகளில் அந்த உருவம் பிரமாண்ட வளர்ச்சியுற்று சமுத்திரத்தில் நுழைந்தது. அங்கு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்தார், வராக மூர்த்தி. பின்னர் பூமாதேவியை காத்து ரட்சித்து ‘பூவராகமூர்த்தி’ என்ற பெயரையும் பெற்றார்.



இரண்யாட்சனுடன் போரிட்டதால் ஏற்பட்ட களைப்பு நீங்க, வராகமூர்த்தி ஒரு இடத்தில் இளைப்பாறினார். அப்போது அவரது தேகத்தில் இருந்து வியர்வைத் துளிகள் பெருக்கெடுத்து ஆறாக ஓடின. அது ஒரு புனித தீர்த்தக் குளமாக மாறியது. சுவாமி இளைப்பாறிய இடம் ஸ்ரீ முஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அவரது தேகத்தில் இருந்து உருவான தீர்த்த குளம் ‘நித்ய புஷ்கரணி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இத்தலத்தில் பூவராக சுவாமி சங்கு, சக்கரம் ஏந்திய இருகரங்களையும், பாண்டுரங்கனைப்போல இடுப்பில் கை வைத்தபடி தரிசனம் தருகிறார்.

Similar News