ஆன்மிகம்
காளிகா பரமேஸ்வரி கோவில் நடைபெற்ற தேர்திருவிழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த காட்சி.

காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2017-03-30 04:36 GMT   |   Update On 2017-03-30 04:36 GMT
கோட்டை பகுதியில் உள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள காளிகா பரமேஸ்வரி என்னும் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 21-ந்தேதி காலை கொடியேற்றமும், மாலை அம்பாள் கேடயத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று பிற்பகலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மதியம் 1.35 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



தேர் பெரியகம்மாளத்தெருவில் இருந்து பெரியகடைவீதி வழியாக காந்தி மார்க்கெட், மரக்கடை வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மற்றொரு சிறிய தேர் சின்னகம்மாளத்தெரு வழியாக சென்று பெரியகடைவீதி, காந்தி மார்க்கெட், மரக்கடை வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப் பட்டது.

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இன்று(வியாழக்கிழமை) அம்மனுக்கு தீர்த்தவாரியும், நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி விழாவும் நடக்கின்றன.

Similar News