ஆன்மிகம்

ஜென் கதை: வாழ்க்கை ஒரு நெடும் கனவு

Published On 2017-03-27 10:07 GMT   |   Update On 2017-03-27 10:07 GMT
காணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
அதிகாலை நேரம்.. தூக்கத்தில் இருந்து விழித்த ஜென் துறவி, தன்னுடைய சீடர்களை அழைத்தார். குருவின் குரல் கேட்டதும் சீடர்கள் அனைவரும் அவர் முன்பாகப் போய் நின்றனர்.

துறவி தன் சீடர்களைப் பார்த்து, ‘என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு விடை காண்பதற்காகவே உங்களை அழைத்தேன்’ என்றார்.

சீடர்களுக்கு திகைப்பு. ‘நம் குருவைத் தேடி எவ்வளவு பேர் வந்து சந்தேகம் கேட்டுச் செல்கின்றனர்? அப்படிப்பட்ட அவருக்கே சந்தேகமா?. அதுவும் நம்மால் தீர்த்து வைக்கக் கூடியதா?’.

இருப்பினும் அந்த சந்தேகத்தை அறியும் ஆவல், சீடர்களுக்கு இருந்தது. ‘என்ன சந்தேகம் குருவே?’ என்றனர்.

‘நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன். ஒரு தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களில் அமர்ந்து தேன் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இப்போது என் கேள்வி, கனவிற்கான பலன் கிடையாது. இப்போது நான் யார்? என்பதுதான்.

சீடர்கள் திருதிருவென விழித்தார்கள்.



குரு தொடர்ந்தார். ‘கனவில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தேன். விழித்த பிறகு பார்த்தால் நான் ஒரு துறவியாக இருக்கிறேன். இப்போது எது விழிப்பு? எது தூக்கம்? என்ற சந்தேகம் வந்துவிட்டது. துறவியாக நான் தூங்கிய போது கனவில் வண்ணத்துப்பூச்சியாக மாறினேனா? அல்லது அந்த வண்ணத்துப்பூச்சி தான் தூக்கத்தில் துறவியாக மாறியதாக கனவு காண்கிறதா?. நாம் விழித்த பின்புதானே அது கனவு என்பது தெரிகிறது. அதுவரை அது மிக தத்ரூபமாக அல்லவா இருக்கிறது? ஆகையால்தான் எனக்கு இந்த சந்தேகம்.

எல்லா உயிர்களுக்கும் நினைவு உண்டு. நான் ஒரு துறவி. நான் கனவில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறினேன் என்றால், ஏன் அந்த வண்ணத்துப்பூச்சி தன் கனவில் துறவியாக மாறியிருக்கக் கூடாது?’ என்றார்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சீடர்கள் மேலும் குழம்பிப் போனார்கள். ஒரு சீடன் மட்டும், ‘குருவே! நாங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டோம். இதுவரை நாங்கள் நம்பி வந்த அடிப்படை கோட்பாடுகளையே இது அடியோடு தகர்த்து விட்டது. இந்தக் கணம் வரை நாங்கள் உறங்கும்போது காணும் காட்சிகளை கனவு என்றும், உறக்கம் கலைந்த பிறகு நடப்பதை நனவு என்றும் கருதி வந்தோம். இப்போது உங்கள் கேள்வி எங்களைப் பெரிய பிரச்சினைக்கு எதிரில் நிறுத்திவிட்டது. இதற்கு விடை காண எங்களுக்கு திறமை போதாது’ என்றான்.

இப்போது குரு சொன்னார். ‘நாம் இரவில் கனவு காணும்போது, பகலில் நடந்த எந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருவதில்லை. விழிப்பு நிலையில் கனவுகள் மறந்து விடுகின்றன. நினைவுகள்தான் முக்கியம் என்றால், பகலில், இரவில் கண்ட கனவுகள் ஓரளவுக்குத்தான் ஞாபகம் வரும். ஆனால் கனவிலோ பகலில் நடந்ததில் ஓர் இம்மி அளவு கூட நினைவில் இருப்பதில்லை. பகலின் காட்சிகளை விட கனவில் நடப்பவை முழுமையாக உண்மையாக இருக்கின்றன. தூங்கச் செல்பவன் விழிக்காமல் தூங்கிக் கொண்டிருந்தால், அவன் காணும் கனவு உண்மையல்ல என்ற உணர்வே அவனுக்கு வராது.

வாழ்க்கையும் கூட ஒரு பெரிய தூக்கத்தில் நாம் காணும் தொடர் கனவாக ஏன் இருக்கக் கூடாது? மரணம் தான் அதன் விழிப்பாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். காணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும்’ என்றார்.

Similar News