ஆன்மிகம்

காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவிலில் லட்சதீப திருவிழா

Published On 2017-03-18 05:05 GMT   |   Update On 2017-03-18 05:05 GMT
காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான லட்சதீப விழா நேற்று நடந்தது.
காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான லட்சதீப விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவில் உட்புறத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு வாரியார் சுவாமிகள் ஞானதிருவளாகத்தில் மாலை 6 மணிக்கு வாரியார் சுவாமிகளின் கொள்ளுபேத்திகள் வள்ளி, லோச்சனா ஆகியோரின் திருப்புகள் விரிவுரை நிகழ்ச்சியும், வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் உரை நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் பி.ராஜகோபால் தலைமையில், கதைசொல்லும் பரதநாட்டிய பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் வாரியார் தம்பி மகன் புகழனார், கோவில் செயல் அலுவலர் மாதவன், ஞானதிருவளாக தலைமை நிர்வாகி திருவடி, வேலூர் மாநகராட்சி சுகாதாரகுழு முன்னாள் தலைவர் கே.பி.ரமேஷ், கவிஞர் லக்குமிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News