ஆன்மிகம்
குளச்சலில் பறக்கும் காவடியில் பக்தர்.

மாசிதிருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் திங்கள்சந்தையில் இருந்து புறப்பட்டது

Published On 2017-03-02 04:15 GMT   |   Update On 2017-03-02 04:15 GMT
மாசிதிருவிழாவை யொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு திங்கள் சந்தையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி திங்கள் சந்தை, இரணியல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் விரதம் இருந்து காவடி எடுத்து திருச்செந்தூருக்கு நடைபயணமாக செல்வது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் விரதம் இருந்து காவடிகளுடன் திருச்செந்தூர் செல்ல ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இதற்காக கடந்த 3 நாட்களாக தலக்குளம், இரணியல், இரணியல் கோணம், பேயன்குழி, பரசேரி, மேற்கு நெய்யூர், ஆலங்கோடு மற்றும் திங்கள் சந்தை ஆகிய பகுதிகளை சுற்றிஉள்ள கிராமங்களில் காவடி பூஜை நடந்தது. இதன்தொடர்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு காவடி சிறப்பு வழிபாடும், அதனை தொடர்ந்து கிராமம்- கிராமமாக காவடி பவனியும் நடந்தது. பின்னர் மாலை 4 மணி முதல் அனைத்து கிராமங்களில் உள்ள காவடிகளும் ஊர்வலமாக மேள-தாளம் முழங்க திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன் வந்தடைந்தது.

மாலை 5.30 மணிக்கு அனைத்து காவடிகளும் அங்கிருந்து புறப்பட்டு இரணியல், பேயன்குழி, பரசேரி, பார்வதிபுரம், நாகர்கோவில் வழியாக திருச்செந்தூருக்கு சென்றது.

இந்த ஊர்வலத்தில் ஒன்று முதல் 12 அடி வரை அலகு குத்திய வேல் காவடி, பறக்கும் காவடி, அக்னி காவடி, சூரியவேல் காவடி, தேர் காவடி, ஊஞ்சல் காவடி, பால் காவடி, தேன், எண்ணெய் காவடி உள்பட பல்வேறு காவடிகளுடன் முருகபக்தர்கள் சென்றனர்.

இந்த காவடி ஊர்வலத்தை பார்க்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று திங்கள் நகரில் கூடினார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க நேற்று மதியம் 2 மணிக்கு மேல் திங்கள் நகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து வாகனங்களும் தக்கலை மார்க்கமாக திருப்பி விடப்பட்டது.

மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து மாலை பறக்கும் காவடிகள் புறப்பட்டு, மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு சென்றன.

இதே போல் வடக்கன்பாகம் தர்மசாஸ்தா கோவிலில் இருந்து வேல்காவடிகள் ராஜாக்கமங்கலம் வழியாகவும், சேரமங்கலம் தென் திருவரங்கத்து ஆழ்வார்சாமி கோவிலில் இருந்து பறக்கும் காவடிகள் பிள்ளையார் கோவில் வழியாகவும் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றன.

குளச்சல் பாறக்கடை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பறக்கும் காவடி ஊர்வலமாக 3 பேரும்,, சாம்பசிவபுரம் சிவன் கோவிலில் இருந்து ஒருவரும் சென்றனர்.

Similar News