ஆன்மிகம்

ஆதலவிளை மலையில் அய்யா வைகுண்டர் மகாதீப திருவிழா நாளை நடக்கிறது

Published On 2017-03-02 03:55 GMT   |   Update On 2017-03-02 03:55 GMT
ஆதலவிளை மலையில் அய்யா வைகுண்டர் மகாதீப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ஆதலவிளை மலையில் அய்யா வைகுண்டர் மகாதீப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னப்பால் தர்மம், 2 மணிக்கு சுவாமிதோப்பு தலைமை பதியில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது.

இதற்கு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார், பூஜிதகுருக்கள் பாலஜனாதிபதி அடிகளார், பாலலோகாதிபதி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். பையன் செல்லவடிவு, ஆதலவிளை ஊர் தலைவர் ஜி.செல்வராஜ், செயலாளர் பி.முத்துநாடார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தலைமைப்பதி பள்ளியறையில் குரு பையன் கிருஷ்ணராஜ் தீபம் ஏற்றி தருகிறார். ஊர்வலம் சுவாமிதோப்பில் இருந்து புறப்பட்டு வடக்கு தாமரைகுளம், வழுக்கம்பாறை, சுசீந்திரம், கோட்டார், பீச்ரோடு, செட்டிகுளம் ஜங்ஷன், வேப்பமூடு ஜங்ஷன், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, தேரேகால்புதூர், வெள்ளமடம், குலசேகரன்புதூர், குருக்கள் மடம் தாங்கல் வழியாக ஆதலவிளை நிழல் தாங்கல் வந்து சேருகிறது.

அங்கு மாலை 6.30 மணிக்கு நிழல் தாங்கலில் இருந்து வைகுண்டதீபம், மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இரவு 7 மணிக்கு மலையில் அய்யா வைகுண்டர் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு பாலஜனாதிபதி தலைமை தாங்குகிறார். பையன் செல்லவடிவு முன்னிலை வகிக்கிறார். ஜனா.யுகேந்த் தீபம் ஏற்றி வைக்கிறார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.டி.பச்சைமால், பா.ஜனதா மாவட்ட தலைவர் எம்.முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இரவு 7.30 மணிக்கு நிழல் தாங்கலில் மாபெரும் அன்னதானம் நடக்கிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, 10 மணிக்கு அய்யாவழி பக்தர்கள் காவி கொடி ஏந்தி ஊர்வலமாக செல்கிறார்கள். பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, 12.30 மணிக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள், நிர்வாக கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

Similar News