ஆன்மிகம்

வைகுண்டர் அவதார தினவிழாவையொட்டி கோவையில் அய்யாவழி பக்தர்கள் ஊர்வலம்

Published On 2017-03-01 06:54 GMT   |   Update On 2017-03-01 06:54 GMT
அய்யா அவதார தின விழாவையொட்டி கோவையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அய்யாவழி பக்தர்கள் ஊர்வலம் நடக்கிறது.
கோவை வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா அவதார தின விழா கொண்டாடப்படும். அது போல் அய்யா வைகுண்டரின் 185-வது அவதார தின விழா வருகிற 3-ந்தேதியும், 4-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சரவணம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் தொட்டில் வாகனத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு மேள, தாளம் முழங்க அய்யா வழி பக்தர்கள் சூழ சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அங்கிருந்து பக்தர்கள் அய்யாவின் திருக்கொடி ஏந்தி, அய்யா சிவசிவ அரகரா என்ற திருமந்திரத்தை உச்சரித்து கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாக வருகிறார்கள். ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், துரைசாமி சித்தர் சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, அய்யாவின் அவதார தின சிறப்பு பணிவிடை, செண்டை வாத்தியம் முழங்க அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல், காலை 7.30 மணிக்கு அன்னதானம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல், இரவு 7.30 மணிக்கு வாகன பணிவிடை, அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News