ஆன்மிகம்
ஆழத்து விநாயகருக்கு தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். (உள்படம்: ஆழத்து விநாயகர்.)

விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் தேரோட்டம்

Published On 2017-03-01 06:51 GMT   |   Update On 2017-03-01 06:51 GMT
விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக் கான விழா நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. மாசி திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக கிராம தேவதைகளின் திருவிழா நடக்கும்.

அதன் படி கடந்த மாதம் 7-ந் தேதி செல்லியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழத்து விநாயகர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விருத்தகிரீஸ்வரருக்கும், விருத்தாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆழத்து விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஆழத்து விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் தனித்தனியே தேரில் எழுந்தருளினார்கள். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு கோட்டை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு கோட்டை வீதிகளின் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று(புதன்கிழமை) தீர்த்தவாரியுடன் ஆழத்து விநாயகருக்கு திருவிழா நிறைவடைகிறது. இதையடுத்து நாளை(வியாழக்கிழமை) விருத்தகிரீஸ்வரருக்கு மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News