ஆன்மிகம்
வண்ண, வண்ண உப்புகளால் வரையப்பட்ட கோலம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய தரிசனம்

Published On 2017-02-25 06:29 GMT   |   Update On 2017-02-25 06:29 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. விடிய, விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மகாசிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிவராத்திரி விழாவின்போது பக்தர்கள் கோவில் வளாகத்தில் வண்ண வண்ண உப்பு கோலங்கள் வரைந்து, கோவில் வளாகம் முழுவதும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

அதன்படி மகாசிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை லட்சார்ச்சனை நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் 3-வது பிரகாரத்தை சுற்றி வந்து வணங்கினர்.

சிவராத்திரியையொட்டி இரவு 7-30 மணிக்கு முதல்கால பூஜையும், 11-30 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4-30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தது. பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் கோவில் வளாகத்தில் வண்ண வண்ண உப்புகளால் சிவன், பார்வதி, லிங்கம் உருவங்கள் வரைந்திருந்தனர். இதனால் நேற்று கோவில் வளாகம் ஆயிரங்கால் மண்டபம், கிளிகோபுர வளாகத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டது.

தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடிய, விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News