ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சீரமைக்கப்படும் தேர்களை படத்தில் காணலாம்.

மாசித்திருவிழாவை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

Published On 2017-02-16 03:48 GMT   |   Update On 2017-02-16 03:49 GMT
மாசித்திருவிழாவை முன்னிட்டு விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. அன்று ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து 10 நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆழத்து விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை சாமிகளின் ஊர்வலமும் நடைபெற உள்ளது. 27-ந் தேதி விநாயகர் நால்வருடன் வீதிஉலாவும், வேடுபரி உற்சவமும், 28-ந் தேதி காலை 7.45 மணிக்கு ஆழத்து விநாயகருக்கு தேர் திருவிழாவும் நடக்கிறது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தீர்த்த வாரியுடன் விழா முடிவடைகிறது.

இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ந் தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் இருந்து 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

7-ந் தேதி விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் அருள்பாலிக்கும் ஐதீக விழாவும், 10-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். 11-ந் தேதி மாசிமக உற்சவம் நடக்க இருக்கிறது. 12-ந் தேதி தெப்ப உற்சவமும், 13-ந் தேதி சண்டிகேஸ்வரர் உபயமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள 5 தேர்களையும் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந் தேதி ஆழத்து விநாயகருக்கு தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேர் சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News