ஆன்மிகம்

திருவிசநல்லூர் கங்கை நீர் பொங்கிய கிணற்றில் புனித நீராடல் நிகழ்ச்சி

Published On 2016-11-30 06:25 GMT   |   Update On 2016-11-30 06:25 GMT
திருவிசநல்லூரில் உள்ள கங்கை நீர் பொங்கிய கிணற்றில் புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருவிசநல்லூர் கிராமம். இங்கு ஸ்ரீதரஐயாவாள் மடம் உள்ளது. ஸ்ரீதர ஐயாவாள் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவபக்தர் ஆவார். இவர் ஒரு முறை கார்த்திகை மாதம் அமாவாசை நாளில் தனது பெற்றோருக்கு பிதுர்க்கடன் செய்ய முடிவெடுத்து, அதற்காக வேத பண்டிதர்களை அழைத்திருந்தார். இதையொட்டி ஏராளமான உணவுகளையும் சமைத்து வைத்திருந்தார். ஆனால் வேத பண்டிதர்கள் வந்து பிதுர்க்கடன் பூஜைகளை செய்வதற்கு முன்பாகவே அவர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை தானமாக வழங்கி விட்டார்.

இந்த நிலையில் பிதுர்க்கடன் பூஜைகளை செய்ய வந்த வேத பண்டிதர்கள், பிதுர்க்கடன் செய்வதற்கு முன்பாகவே உணவுகளை தானம் செய்ததால் தோஷம் ஏற்பட்டு விட்டதாக கூறினர். தோஷ பரிகாரத்திற்கு காசியில் உள்ள கங்கையில் புனித நீராட வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் பிதுர்க்கடன் செய்வோம் என்றும் கூறினர். இதை கேட்ட ஸ்ரீதரஐயாவாள் சிவனிடம் மனம் உருக பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனை பலித்தது. சிவன் அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் கங்கை நீரை பொங்கச் செய்தார். இவ்வாறு கிணற்றில் பொங்கிய கங்கை நீரில் புனித நீராடிவிட்டு, ஸ்ரீதரஐயாவாள் தனது பெற்றோருக்கு பிதுர்க்கடனை செய்து முடித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் திருவிசநல்லூர் ஸ்ரீதரஐயாவாள் இல்லத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கிணற்றை பக்தர்கள் “புனித கங்கை கிணறு” என்றே அழைக்கிறார்கள். தற்போது ஸ்ரீதரஐயாவாள் இல்லம் மடமாக மாற்றப்பட்டு, அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வழக்கம்போல் இந்த ஆண்டும் கார்த்திகை அமாவாசையையொட்டி நேற்று திருவிசநல்லூர் ஸ்ரீதரஐயாவாள் இல்லத்தில் புனித கங்கை கிணற்றில் புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். முன்னதாக திருவிசநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதரஐயாவாள் உருவ படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதைதொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. புனித நீராடலை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஸ்ரீதரஐயாவாள் புறப்பாடும், ஆஞ்சநேயர் உற்சவமும் நடக்கிறது.

Similar News