ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2016-11-06 07:04 GMT   |   Update On 2016-11-06 07:04 GMT
திருத்தணி முருகன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேதரராய் காட்சியளித்த முருகப்பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 31-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வகையான அலங்காரங்கள் நடைபெற்று வந்தன.

இங்குள்ள காவடி மண்டபத்தில் சன்முகர் கடவுளுக்கு லட்சார்ச்சனை காலை முதல் இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு தேவபாராயணங்களும், பக்தி இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

முன்னதாக சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து பெங்களுர், கரூர் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான புஷ்பங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சண்முகர் கடவுளுக்கு சுமார் 5 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் மண்டபத்தில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பக்தி சன்மார்க முறையோடு மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள், வேதவிப்பண்ணர்கள் மந்திரங்கள் முழங்க வைபவ முறைப்படி கோலாகலமாக நடந்தது.

வள்ளி, தெய்வானை சமேதரராய் காட்சியளித்த முருகப்பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பெண் பக்தர்களுக்கு மாங்கள்யம், ஜாக்கெட் துணி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார். வே.ஜெய சங்கர் தலைமையில், இணை ஆணையர் செ.சிவாஜி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News