ஆன்மிகம்

பூஜையின் போது கோவில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

Published On 2016-10-22 09:39 GMT   |   Update On 2016-10-22 09:39 GMT
பூஜையின் போது கோவில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன் என்பதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள்.

மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின் பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து.

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மணி ஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனமும் செல்கிறது. சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு.

Similar News