ஆன்மிகம்

இழந்த செல்வத்தை திரும்ப தரும் கள்ள வாரணப்பிள்ளையார்

Published On 2016-10-21 06:09 GMT   |   Update On 2016-10-21 06:09 GMT
திருக்கடையூர் கோவிலில் உள்ள விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைக்க காரணம் என்னவென்று பார்க்கலாம்.
அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர்.

அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர். இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது.

விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார். முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து வழிபட்டு மன்னிப்புக் கேட்டனர். மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார். தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.
அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் திருக்கடையூர் கோவிலில் உள்ள விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.

இந்த கள்ள விநாயகர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.

இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார்.

சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள். அபிராமபட்டர் அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள விநாயகரை புகழ்ந்து பாடி விட்டே அந்தாதி பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News