ஆன்மிகம்

அனைத்து தோஷங்களையும் விலக்கும் அப்ரதீஸ்வரர்

Published On 2016-11-25 03:58 GMT   |   Update On 2016-11-25 03:58 GMT
இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம்.
அப்ரதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனின் திருநாமம் அப்ரதீஸ்வரர் என்பதாகும். அன்னைக்கு அதுல சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் ‘நகர்’ என்று பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள கல்வெட்டுளிலும் ‘நகர்’ என்ற பெயரே காணப்படுகிறது.

இந்த கோவிலின் தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில், ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மரத்திற்கு சந்தனம், பூசு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும் வழிபட்டால் பித்ரு தோஷமும், இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். திருமணக் குழப்பங்கள் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் நவமி திதியில் இத்தலம் வந்து கோவில் பிரகாரத்தை இடம் வலமாகச் சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன் கிடக்கும்.

பவுர்ணமி நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் விளக்குப் பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்.

இறைவனையும் இறைவியையும் கோள்கள் வழிபட்ட தலம் இது. எனவே இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பதுடன், பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.

திருச்சி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது நகர் என்ற திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லும்.

Similar News