ஆன்மிகம்

சனிதோஷம் நீங்க சனிக்கிழமை வழிபாடு அவசியம்

Published On 2016-10-22 04:28 GMT   |   Update On 2016-10-22 04:28 GMT
சனிக்கிழமைகளில் சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சனிக்கிழமை காலை தொடர்ந்து எண்ணெய் தேய்த்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும்.

அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூன்று பேருக்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம்.

இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

Similar News