ஆன்மிகம்

சங்கடம் தீர்க்கும் புரட்டாசி சனி

Published On 2016-10-15 02:19 GMT   |   Update On 2016-10-15 02:19 GMT
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் எள் எண்ணெய் விளக்கெரித்து, சனி பகவானை வழிபடுவது நல்ல பலனைத் தரவல்லது.
சனீஸ்வர பகவானை வழிபட உகந்த நாளாக புரட்டாசி சனிக்கிழமை குறிப்பிடப்படுகிறது. சனீஸ்வரனுக்கு அதிபதியாக இருப்பவர் விஷ்ணு பகவான். எனவே விஷ்ணுவின் ஆலயங்களிலும், சனி பகவானுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்தாலும், சனி தோஷங் களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் கிருதகர்மா. அவனது பார்வை யார் மீது விழுகிறதோ அவர்களுக்கு ஆபத்து விளையும். ஆகவே தனது மகனை தன் அருகிலேயே வைத்து பாதுகாத்து வந்தாள் சாயாதேவி.

ஒரு முறை கயிலையில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அனைவரும் சென்றனர். தானும் அந்த விழாவுக்கு போக வேண்டும் என்று கிருதகர்மா அடம்பிடித்தான். எனவே ‘யாருக்கும் தெரியாமல் விழாவைப் பார்த்து வா’ என்று கிருதகர்மாவை, சாயாதேவி அனுப்பிவைத்தாள்.

கிருதகர்மா கயிலை வந்தடைந்தான். அவன் வந்திருப்பதை அறிந்த பார்வதிதேவி, விநாயகரை தன் மடியிலேயே வைத்துக் கொண்டாள். இருப்பினும் விநாயகப் பெருமானை, கிருதகர்மா பார்த்து விட்ட காரணத்தால், விநாயகரின் தலை தெறித்து விழுந்தது. பார்வதிதேவி பதறிப் போனாள். சிவபெருமான், வடக்கு திசையில் தலை வைத்து படுத்திருக்கும் யானையின் தலையை கொண்டு வரும்படி, பைரவரிடம் கட்டளையிட்டார். அதன்படி கொண்டுவரப்பட்ட யானை தலை விநாயகருக்கு பொருத்தப்பட்டது. அது முதல் விநாயகர், ‘கஜமுகன்’ ஆனார்.

தன் மகனின் யானைத் தலையைப் பார்த்ததும் பார்வதி தேவிக்கு கோபம் வந்தது. ‘உன் பாதம் ஊனமாகட்டும்’ என்று கிருதகர்மாவை சபித்தாள். அதற்கு பிறகு அவன் விந்தி, விந்தி நடக்கத் தொடங்கினான். அதனால் சனி பகவான் என்று பெயர் பெற்றான்.

பார்வதிதேவியின் சாபத்தால், தனது மகனது கால் ஊனமானதைப் பார்த்த சாயாதேவி, விநாயகரின் வயிறு பெரு வயிறாகட்டும் என்று சாபம் கொடுத்தாள். அன்று முதல் விநாயகர், ‘லபோதரன்’ ஆனார். விநாய கருக்கு யானை முகம் எப்படி வந்தது என்பதற்கு இந்தக் கதையைத் தவிர வேறு பல கதைகளும் உண்டு.

தன் பார்வை படும் இடம் எல்லாம் கெடுதல் நடை பெறுவதை எண்ணி வருந்திய சனி பகவான், தனக்கு இதில் இருந்து விடுதலை தரும்படி சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது ஈசன், சனி பகவானுக்கு கிரக அந்தஸ்து கொடுத்து, ‘நீ அமையும் இடத்தைப் பொறுத்து, நன்மை- தீமை கூடவும் குறையவும் செய்யும்’ என்று அருளினார். அதன் காரணமாக சனி பகவான் அமையும் இடத்தைப் பொறுத்து மனிதர் களுக்கு நன்மை தீமைகள் விளைகின்றன.

சனி பகவானால் பீடிக்கப்படாதவர்களே இல்லை என்பார்கள். நிடத நாட்டு மன்னன் நளன், ராமபிரான், பாண்டவர்கள், தேவேந்திரன், சிவபெருமான் என பலரும் அவன் பிடியில் சிக்கியவர்கள். அவர்களுக்கே அந்த நிலைமை என்றால், மனிதர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?.

சனி பகவானுக்கு பிடித்த உணவு எள் கலந்த நைவேத்தியம். பிடித்த நிறம் கருநீலம் அல்லது கறுப்பு. விருப்பமானவை நீல நிறப் பூக்கள்.

புரட்டாசி சனிக்கிழமை, சனீஸ்வரனை வேண்டி விரதம் இருக்கும் தினமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் எல்லாச் சனிக்கிழமைகளிலும் விரதம் அனுஷ்டித்து சனி பகவானின் வாகனமான காகத்திற்கு உணவு படைத்த பின்னரே விரதம் இருப்பவர்கள் உணவு உட்கொள்வார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் எள் எண்ணெய் விளக்கெரித்து, சனி பகவானை வழிபடுவது நல்ல பலனைத் தரவல்லது.

Similar News