சினிமா
சார்பட்டா பரம்பரை படத்தின் போஸ்டர், உதயநிதி ஸ்டாலின்

கதையோடு கழகத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது அருமை - பா.இரஞ்சித்திற்கு உதயநிதி பாராட்டு

Published On 2021-07-25 06:09 GMT   |   Update On 2021-07-25 06:09 GMT
திமுக எம்.எல்.ஏ.வும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ‘சார்பாட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கதை 1970-களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை  ஆங்காங்கே இணைத்திருந்தனர். 

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.வும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார். 


பா.இரஞ்சித், உதயநிதி ஸ்டாலின்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது. 

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார் ரங்கன் வாத்தியாராக பசுபதி, டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கேன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர், இயக்குனர் பா.இரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.
Tags:    

Similar News