சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் சத்யராஜ்

Published On 2019-04-13 05:13 GMT   |   Update On 2019-04-13 05:13 GMT
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

சோழ வம்சம் தலைதூக்கியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.



60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது.



செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

Tags:    

Similar News