சினிமா

போலி செய்திகளை பா.ஜ.க.வினர் அதிக அளவில் பரப்புகின்றனர் - பிரகாஷ் ராஜ்

Published On 2018-11-12 11:18 GMT   |   Update On 2018-11-12 11:18 GMT
சென்னையில் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், போலி செய்திகளை பா.ஜ.க.வினர் அதிக அளவில் பரப்புகின்றனர் என்று கூறியிருக்கிறார். #PrakashRaj
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘போலி’ செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலி செய்தி என் மீது நிறைய பேசப்பட்டது. சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

பெரும்பாலான அரசியல் கட்சியினர் போலி செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றது.

இவ்வாறு பேசினார்.

பின்னர் பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த 4 1/2 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவு பரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி படித்தவர்கள் தான் பாமர மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.



இன்றைய செய்தித்துறை அனைத்துமே அரசாங்கம் கையில் உள்ளது. பெரும்பாலான தவறான தகவல்களை அரசு தான் பரப்பி வருகிறது. இவ்வாறான போலி செய்திகளால் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன.

மேலும் இதன் மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர். மேலும் இதனால் சமூகத்தில் வன்முறை ஏற்படுத்தப்படுகிறது.

உள்நோக்கத்தோடு ஒருவர் மீதோ அல்லது அமைப்பு மீதோ பொய் செய்தி பரப்பப்படுகிறது. வதந்திகளை நம்பி கும்பல் தாக்கும் சம்பவமும் அதிகரித்துள்ளது. 4 1/2 ஆண்டு காலத்தில் வலது சாரி அமைப்புகள் அச்சுறுத்தி வருகின்றன. வதந்திகள் மூலம் பயன் அடைய முயற்சி செய்கிறார்கள்.

மாட்டிறைச்சி விவகாரத்திலும் கூட வதந்திகளை பரப்பி தாக்குதலை நிறைவேற்றி உள்ளனர். இந்த போக்கினை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News