சினிமா

வதந்திகளை நிறுத்துங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ்

Published On 2018-10-30 10:15 GMT   |   Update On 2018-10-30 10:15 GMT
விஜய்யின் சர்கார் படத்தின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்திகளை நிறுத்துங்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார். #Sarkar #ARMurugaDoss
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எழுத்தாளரும் உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும், செங்கோல் என்ற பெயரில் அக்கதையை தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சர்கார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயருடன் நன்றி என்று போட இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். இதையடுத்து வருண் ராஜேந்திரனின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாக செய்திகள் வெளியானது.

இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘நிறைய வதந்திகள் பரவி வருகிறது. பாக்யராஜ் அவர்கள் என்னை கூப்பிட்டு, பிரச்சனை போயிட்டு இருக்கிறது. ஒருத்தருடைய ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுட்டாங்க. அதை பத்து வருடங்களுக்கு முன்பாக வருண் ராஜேந்திரன் எழுதி வைத்திருக்கிறார் என்று சொன்னார். அந்த ஒரு கரு தான் எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி, அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எனக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குனர் எழுதி பதிவு செய்திருப்பதால், அவரை பாராட்டி ஊக்குவிப்பதற்காக டைட்டிலில் அவர் பெயர் போட சொன்னார். சரி என்று ஒப்புக்கொண்டேன். 

மற்றபடி, ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.



Tags:    

Similar News