சினிமா

சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்

Published On 2018-09-07 11:32 GMT   |   Update On 2018-09-07 11:32 GMT
தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் ரஜினி, சோபியா விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காததிற்கு கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். #Rajini #Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் இறங்கி உள்ளார். தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்தும் வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டபோது ரஜினிகாந்த் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் போராட்டத்துக்கு எதிராகவும் அரசுக்கு சாதகமாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையானது.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணித்த மாணவி சோபியா பாஜக அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ரஜினி நேற்று படப்பிடிப்புக்காக உத்தர பிரதேசம் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் சோபியா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்தார். இது நேற்று சமூக வலைதளங்களில் பரபரப்பானது.



அரசியலுக்கு வருவதாக அறிவித்தவர் கருத்து சொல்ல தயங்குவது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிப்பதும், தெரிவிக்காததும் தனி மனிதனின் விருப்பம். ரஜினி கருத்து சொன்னால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்று ரஜினி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ரஜினி கருத்து சொல்லாததை விமர்சித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஊரே விவாதிக்கும் வி‌ஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமல் இருப்பதும் தவறுதான்’ என்று பதிவிட்டு அதில் ரஜினியையும் சேர்த்துள்ளார்.
Tags:    

Similar News