சினிமா

சினிமாவில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம் - சூர்யா பேச்சு

Published On 2018-09-01 12:16 GMT   |   Update On 2018-09-01 12:16 GMT
சென்னையில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, எது உங்கள் மனதுக்கு நெருக்கமானதோ அதை செய்யுங்கள். இங்கு பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம் என்று கூறினார். #Suriya #NGK
வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான வாய்ப்புகளை பெற்றுத் தருகின்றன. அந்தவகையில், மூவிபஃப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, 2D  என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர பாண்டியன், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும், பரிசுத்தொகையையும் வழங்கினார்கள்.

இந்த குறும்பட போட்டியில் 'கல்கி'யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D  நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவருக்கு அடுத்ததாக 'கம்பளிப்பூச்சி' இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம்' குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் 'மயிர்' குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், "ஒரு படம் எடுப்பது. சுலபம். ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும் நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள். நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப் பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.



எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாம் என்று நினைத்தால் அதை அப்போதே உடனே சரிசெய்து விடவேண்டும். எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம். 

எது உங்கள் மனதுக்கு நெருக்கமானதோ அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் வெளிப்படையானது, இதில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என கூறினார். #Suriya #NGK #MoviebuffS2Awards2018

Tags:    

Similar News