சினிமா

இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி

Published On 2018-06-15 09:23 GMT   |   Update On 2018-06-15 09:23 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். #Kaala #Rajini
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. நில உரிமைக்காக போராடும் அடித்தட்டு மக்களை பற்றிய படம் என்பதாலும் ரஜினி சமீபத்தில் மக்கள் போராட்டத்துக்கு எதிராக சில கருத்துகளை கூறியதாக சர்ச்சை கிளம்பியதாலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது.

காவிரி பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடு காரணமாக கர்நாடகாவிலும் ரஜினியின் சர்ச்சை பேச்சால் உலக நாடுகளில் உள்ள தமிழர்களிடமும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் டார்ஜிலிங்கில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் காலா படம் பற்றி கூறும்போது ‘ காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது என்று கூறினார்.

அவர் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதிக்கு மேற்கு வங்க சுற்றுலாத்துறை அதிகாரிகள் வருகை தந்து ரஜினியை சந்தித்தனர். மம்தாவின் வாழ்த்துகளை ரஜினியிடம் தெரிவிக்க வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் படத்தின் கதை பற்றிய சர்ச்சைக்கு பதிலளிக்கும் போது ‘இந்த படம் யாரைப் பற்றிய உண்மைக்கதையும் இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனையில் உருவானது’ என்று கூறி உள்ளார்.

திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று தாராவி மக்களுக்காக போராடிய திரவியம் நாடாரின் கதை தான் காலா படம் என்று அவரது வாரிசுகள் வழக்கு தொடுத்தது குறிப்பிடத் தக்கது.
Tags:    

Similar News