சினிமா

மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு

Published On 2018-04-21 05:30 GMT   |   Update On 2018-04-21 05:30 GMT
காவிரி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக் கோரி நடிகர் சிம்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். #STR
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், திரைப்பட துறையினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.

அவர் போலீசாரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்சூர் அலிகான் சிறையில் இருந்து வருகிறார்.

ஆனால் காவிரி நீர் பிரச்சினைக்காக நடிகர்-நடிகைகள் பங்கேற்ற போராட்டத்தில் சிம்பு பங்கேற்காமல் புறக்கணித்தார். போராட்டத்தால் தீர்வு ஏற்படாது. இரு மாநிலமும் பேசினால் தீர்க்க முடியும் என்று கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர்அலிகானை விடுவிக்கக் கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு சிம்பு இன்று காலை 9.45 மணிக்கு வந்தார். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.



அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல.

அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

அவரது குடும்பத்தினர் என்னை சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டேன்

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சிம்பு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வரும் தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் 50 பேர் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியே செல்லும்படி கூறினர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் கூட்டமாக கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் 10 ரசிகர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். #STR #MansoorAliKhan

Tags:    

Similar News