சினிமா

சல்மான் கானுக்கு சிறை - ரூ.600 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிக்கும்

Published On 2018-04-06 06:15 GMT   |   Update On 2018-04-06 06:15 GMT
நடிகர் சல்மான் கான் சிறை தண்டனையால் அவரை நம்பி பணம் முதலீடு செய்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? என கலக்கம் அடைந்துள்ளனர். #SalmaanKhan
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மான் வேட்டையாடிதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் சல்மான் கானை நம்பி பணம் முதலீடு செய்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? என கலக்கம் அடைந்துள்ளனர்.

சல்மான் கான் தற்போது ‘ரேஸ் 3’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் டப்பிங் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘கிக் 2’, ‘தபாங் 3’ மற்றும் ‘பாரத்’ ஆகிய படங்களிலும் அவர் நடிப்பதாக இருந்தது. இது தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வந்தார்.



‘ரேஸ் 3’ தவிர்த்து பிற படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத போதிலும் சல்மான் கானின் சிறை தண்டனையால் சுமார் ரூ.600 கோடி வரையிலான சினிமா வர்த்தகம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பொதுவாக சல்மான் கானின் திரைப்படங்கள் குறைந்தபட்சம் ரூ.200 கோடி வரையில் வசூல் செய்து சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் அளித்து வருவதாகவும், இதனால் அவரது சிறை தண்டனை இந்தி சினிமா தொழிலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சினிமா வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #SalmaanKhan
Tags:    

Similar News