சினிமா

படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதற்கு சித்தார்த் எதிர்ப்பு

Published On 2018-03-22 06:18 GMT   |   Update On 2018-03-22 06:18 GMT
ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் 4 படப்பிடிப்புகளுக்கு பட அதிபர்கள் சங்கம் அனுமதி வழங்கியதற்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவருவதை நிறுத்தியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக 16-ந் தேதி முதல் அனைத்து சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டனர். இதனால் 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளியூர் படப்பிடிப்புகளை 23-ந் தேதி முதல் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த நடிகர் விஜய் படப்பிடிப்பு உள்பட 4 படப்பிடிப்புகளை மட்டும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து நடத்திக்கொள்ள பட அதிபர்கள் சங்கம் அனுமதி வழங்கியது. அரங்கு செலவுகள், வெளிமாநில ஸ்டண்ட் நடிகர்களை அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தியது போன்ற பல காரணங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க 4 படங்களுக்கும் அனுமதி வழங்கியதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்தது.



இதற்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளனர்.

நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்றைய சினிமா மார்க்கெட்டில் ஒவ்வொரு படமும் கடினமான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. ஒரு படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்தால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் சமம். ஒற்றுமை இல்லாவிட்டால் கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும். தமிழக அரசு சினிமாவை பொருட்படுத்தவில்லை. கண்டுகொள்ளவும் செய்யாது. இதை ஏற்கனவே நிரூபித்து விட்டனர். அவர்கள் மாற வேண்டுமானால் ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும். ஒற்றுமையாக இருப்போம். பிறகு மாற்றம் வரும்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News