சினிமா

தள்ளிப்போகிறதா ரஜினியின் காலா?

Published On 2018-03-14 14:52 GMT   |   Update On 2018-03-14 14:52 GMT
தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம், தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். அதுபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்தது. 

கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது. 

இந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில் கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 



திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. 

அடுத்தமாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காலா பட ரிலீஸும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 27ம் தேதி காலா வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்ததில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News