சினிமா

வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல நடிகர் பகத் பாசில் கைது

Published On 2017-12-26 02:29 GMT   |   Update On 2017-12-26 02:29 GMT
வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் திருவனந்தபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கேரள மாநில வங்கி ஒன்றில் கடன் பெற்று விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த காரின் பதிவு புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டு இருந்தது.

மேலும், அவர் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வருவதாக கூறி இந்த சொகுசு கார் வாங்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர் போலி ஆவணைங்களை தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் ரூ.20 லட்சம் மற்றும் அதற்கும் மேலான மதிப்பில் சொகுசு வாகனங்களை வாங்கினால் 20 சதவீத வரி செலுத்தவேண்டும். இதை தவிர்ப்பதற்காக, அதாவது கேரளாவில் வரி ஏய்ப்பு செய்வதற்காக இதுபோல் போலி ஆவணங்களை அவர் தயாரித்ததாக தெரிகிறது.



இதைத்தொடர்ந்து பகத் பாசில் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். அதை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், போலீசார் பகத் பாசிலை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரத்துக்கான பிணைப்பத்திரம் மற்றும் இருவர் அளித்த உத்தரவாதங்கள் அடிப்படையில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோன்ற வழக்குகள் நடிகரும் பா.ஜனதா எம்.பி. யுமான சுரேஷ் கோபி, நடிகை அமலா பால் ஆகியோர் மீதும் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News