சினிமா

மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’

Published On 2017-11-29 08:40 GMT   |   Update On 2017-11-29 09:25 GMT
ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் ‘கிராபிக்ஸ்’ பணிகள் முடிவடையாததால் திரைக்கு வரும் தேதியை மீண்டும் தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது.

ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி 2.0 திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.



கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் பத் மன் படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2.0 அதே நாளில் வெளியாகாது என்பது உறுதியாகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே படத்தை ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வரலாமா? என்று ஆலோசிக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் குடும்பத்தோடு படம் பார்க்க வருவார்கள் என்று கருதுகிறார்கள்.

2.0 படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி டி.வி. உரிமை ரூ.110 கோடிக்கு விலை போய் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த இந்திய படமும் இவ்வளவு தொகைக்கு விற்கப்படவில்லை.

அமீர்கானின் தங்கல் படத்தை ரூ.75 கோடி டி.வி உரிமைக்கு விற்றனர். 2.0 படத்தின் டிரைய்லர் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News